தேனி மாவட்டம் (Theni district)


1996-இல் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இது மதுரை மாவட்டத்துடன் பலகாலம் இணைந்திருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறு தேனி மாவட்டத் திற்கும் பொருந்தும். வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும் தேனி மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது. பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, அல்லிநகரம், போடி , சின்னமனுர், உத்தமப்பாளையம், கம்பம், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை - இம்மாவட்டத்தில் உள்ள சில முக்கிய ஊர்கள்.


தேனி (Theni): இந்நகராட்சிக்கு தேனி-அல்லிநகரம் எனப் பெயர். அல்லிநகரத்தின் ஒரு பகுதியே தேனி. கம்பம் பள்ளத்தாக்கில் அழகுற அமைந்துள்ளது. பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டின் பெரிய சந்தை தேனிச் சந்தையாகும். குன்றுகளின் அடிவாரத்தில் இருப்பதால், ஆரோக்கியமான இயற்கைச் சூழல் இங்கு நிலவுகிறது. இங்கிருந்து வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியாறு நீர் மின் நிலையம், சுருளி நீர்வீழ்ச்சி, கும்பங்கரை அருவி, கொடைக்கானல், குரங்கணி, சபரிமலை முதலிய சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. இந்நகரத்தில ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுச் சந்தையும், வியாழக்கிழமைகளில் ஊர்ச் சந்தையும் கூடுகின்றன. நுற்பு நெசவாலைகள், பருத்தி, நெல் அரவை ஆலைகள், எண்ணெய் ஆட்டும் ஆலைகள், கடலை உடைக்கும் ஆலைகள், சிமெண்டு தூண்கள் செய்யும் தொழிலகம், வங்கிகள், தரகு மண்டிகள், சுங்கத்துறை அலுவலகம் ஆகியன இந்நகரில் அமைந்துள்ளன.

பெரியகுளம் (Periyakumlam): வராக நதிக்கரையில் அமைந்த இவ்வூரை, வடகரை-தென்கரை என்றும் பிரிக்கின்றனர். கொடைக்கானல் மலையின் அடிவாரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் அரசினர் பழப்பண்ணை, கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நகராண்மைக் கழகம், கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன உள்ளன.

கம்பம் (Cumbam): இங்கே வேளாண்மையே பெரிய தொழிலாக விளங்குகிறது. இவ்வூரருகே குண்டலக் கண்மாய் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் லோயர்கேம்ப் (LowerCamp) என்ற ஊரில் பெரியாறு ஏரித்தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி நிலையம் அமைத்திருக்கிறார்கள். தேக்கடிக்கு அருகே, மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெட்டியிருக்கிறார்கள். பெரியாற்றின் நீர் மின்சார நிலையத்தில் புகுந்து அங்குள்ள மூன்று பெரிய மின்னுற்பத்தி இயந்திரங்களைச் சுழலச் செய்கிறது. பிறகு இந்த நீர் வைகை அணையில் போய் விழுகிறது. கம்பத்திலிருந்து குமிளி 20கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குச் செல்லும் மலை வழியில் இருபுறமும் இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.

போடி (Bodi): போடி முப்புறமும் உயர்தோங்கிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து 90கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏலக்காய் விளைச்சலிலும், ஏலக்காய் வணிகத்திலும் இந்நகர் பெருமை பெற்றது. ஊத்தம்பாறை ஆறு, கூவலங்காறு, கொட்டக்குடி ஆறு, வலசை ஆறு, முத்துக்கோம்பையாறு என்றும் ஐந்து ஆறுகள் பாய்வதால் பஞ்சநதி என்றும் இவ்வூருக்குப் பெயர் உண்டு. தமிழ்நாட்டில் இலவம் பஞ்சு உற்பத்தியில் போடிநாயக்கனுர் முன்னணியில் உள்ளது. இவ்வூரில் ஏலக்காய் பயிரிடுவோர் சங்கம் செயல்படுகிறது. சென்னைத் துறைமுகத்திற்கு தேயிலைப் பெட்டிகளை அனுப்புவதற்காகவே மதுரை -போடிநாயக்கனுர் இரயில்பாதை அமைக்கப்பட்டது.


இம்மாவட்டத்தில் வைகை அணையும், சுருளி நீர்வீழ்ச்சியும் சுற்றுலாத் தலங்களாகும்.

சுருளி நீர்வீழ்ச்சி:
தேனியிலிருந்து தேக்கடி செல்லும் சாலையில், கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுருளி நீர்வீழ்ச்சியில் 50 அடி கீழேயும் 20 அடியிலும் இரண்டும் தட்டுகளாய் நீர் கொட்டுகிறது. சிறிதும் வற்றாது ஆண்டு முழுவதும் நீர் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியும், அங்கு கட்டப்பட்டுள்ள அணையும் கண்களுக்கு விருந்தளிப்பதாய் அமைந்துள்ளன. குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.


வைகை அணை:
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழி பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது. பொதுவாக மழைக்காலத்தில், குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும்.பிற காலங்களில் பொதுவாக வறண்டே காணப்படும். மதுரையிலிருந்து 69 கி.மீ. தொலைவில், ஆண்டிப்பட்டிக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கி.பி 1955 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பெற்றது. நீர் கிடைக்கும் பகுதியின் பரப்பு 870 சதுர மைல். வைகை அணையை அடுத்து ஓர் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீர் வளமிக்க காலத்தில் இங்கு செயல்படும் கண்ணைக் கவரும் ஒளி அமைப்புகள் நெஞ்சை அள்ளும் அழகுச் சூழலை உருவாக்கு கின்றன. இதனால் வைகை அணை சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கி வருகிறது.

3 comments:

  1. Anonymous said...

    Hi,

    Im also from Theni.
    You are doing a good Work.
    Keep it up..

  2. Krishna said...

    Hi,
    Im also from Theni..
    U R doing a good work..
    Keep it up..

  3. Arunkumar KP said...

    obviously from theni. good job.

    I actually contribute in wikipedia for theni. I wish you can enhance wikipedia page aswell.